உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவு இலங்கை ஏற்படும் ஆபத்து : சரியாக 25 ஆண்டுகள் ஆகும் அச்சம்!!

இலங்கையில் இருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீ பற்றிய நியூ டைமைன் கப்பல் வெடித்தால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் நிலை கொண்டுள்ள கப்பலை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கப்பலில் நேற்று ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தற்போது வரையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த கப்பல் மூலம் வெளியேறும் எரிப்பொருள் வலய ரீதியாகவும், உலகிலும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர கூறினார்.


கிரிந்தையில் இருந்து கிழக்கே உள்ள கடற்பகுதிக்கு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அது உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு.
குறித்த கப்பலின் எரிபொருள் களஞ்சியசாலையில் சிறிய துளையொன்று ஏற்பட்டாலும் அதனை தடுக்க காலஅவகாசம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எண்ணெய் கசிவு ஏற்பட்டவுடன், அது திடப்படுத்துகிறது. இது கிரீஸாக மாறி நீரில் மிதக்கிறது. அந்த கிரீஸ் அருகம்பே, நிலாவெளி, வாகரை மற்றும் திருகோணமலை கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் அவ்வாறுவந்தால் அவற்றை அகற்ற சிறிது காலம் எடுக்கும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் தர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.



அவ்வாறு அகற்றினாலும் சுமார் 60 சதவீத கிரீஸை அகற்ற முடியும். எனினும் 40 சதவீதத்தை அகற்ற முடியாது. ஒவ்வொரு மணற்கல்லையும் சுத்தம் செய்ய முடியாது. எண்ணெய் அடுக்கு அதன் உண்மை நிலைக்கு திரும்ப 25 அல்லது 30 வருடங்கள் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் மென்மையாய் இருப்பதால் திமிங்கலங்கள், ஆமைகள் போன்ற விலங்குகள் தண்ணீரிலிருந்து மேல் எழும்ப முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்டுள்ள கப்பலில் 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.