நல்லதே செய்...😊😊😊😊😊☺☺☺☺


மற்றோருக்கு எப்பொழுதும் உதவி செய்....


நீதி – நன் நடத்தை


உபநீதி – அன்பாக பழகுதல், சேவை புரிதல்


கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு சிறிய பையன் கெட்ட பழக்கங்களுடன், 


மற்றவர்களிடம் மரியாதையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு, சமூகத்திற்கு விரோதமான சில செயல்களைச் செய்து குற்றவாளியாக மாறிக் கொண்டிருந்தான். 


அவனுடைய தாயார் ரொம்ப சிரமப்பட்டு அவனுக்குப் புத்திமதி கூறி ஒழுங்கு முறைக்கு கொண்டு வரப் பாடுபட்டார். 


ஆனால் அவள் முயற்சிகள் வீணாயிற்று. வேறு வழி தெரியாமல் புத்தரிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். பையனிடம் கஷ்டப்பட்டுப் பேசி அவரிடம் கூட்டிச் சென்றாள்.


இருவரும் வனத்தில் தியானம் செய்து கொண்டிருந்த புத்தரிடம் சென்றார்கள். அழுதுக் கொண்டே தாயார் அவர் காலில் விழுந்தாள். உடனடியாகப் புத்தர், “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.


அதற்கு அந்த அம்மா, “என் பையன் கெட்டவனாக இருக்கின்றான். தயவு செய்து உதவி செய்யுங்கள்” எனக் கதறினாள்.


புத்தர் பையனைப் பார்த்து, “இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பான். தாமதமாக வந்திருக்கிறீர்கள்” எனக் கூறினார்.


 வேதனையோடு வீடு திரும்பினார்கள். இரவு முழுவதும் மரண பயத்துடன் இருந்ததனால் தூங்கவே இல்லை. இருபத்தி மூன்று மணி நேரம் சென்றது. புத்தர் அவர்கள் தங்கும் இருப்பிடத்திற்கு சென்றார்.


பிறகு பையனைப் பார்த்து, “இந்த இருபத்தி மூன்று மணி நேரத்தில் ஏதாவது தப்பு செய்தாயா?” என கேட்டார்.

இல்லை என்று பதிலளித்தான்.


அப்படியென்றால், “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என வினவினார்.

அதற்குப் பையன், “என் உயிர் பிரியும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் நான் செய்த தப்புகள் அனைத்தையும் நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். 


இந்த விலை மதிப்புள்ள வாழ்வை வீணாக்கியதை நினைத்து வருத்தப் படுகிறேன். ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன்” என வருத்தத்தோடு சொன்னான்.


புத்தர் மிக அன்போடு, “கவலைப் படாதே, தற்பொழுது சாக மாட்டாய். உன் மரணம் தள்ளிப் போடப் பட்டிருக்கிறது. 


நல்ல எண்ணங்களுடன் மற்றவர்களுக்கு உதவி செய்தால் நாம் இறந்த பிறகும் போற்றபடுவோம். 


நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நம்மைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள்” என எடுத்துரைத்தார்.


நீதி


மரணம் யாருக்கு எந்தச் சமயத்தில் வரும் என்று தெரியாது. உயிரோடு இருக்கும் பொழுது நல்லவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பயனற்ற ஒரு வாழ்க்கைக்குச் சமமாகும்.