ஏளனம் என்பதற்கு கேலி,கிண்டல், இகழ்ச்சி,பகடி, எகத்தாளம், அவமதிப்பு,நிந்தை

இப்படிப் பலவாறாகப் பொருள் கூறப்படுகிறது.   


ஆங்கிலத்தில் taunt,ridicule,scorn,jeer,sneer,tease,

mock, scoff etc., என்று பல விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.  


நாம் ஒருவரையும் நம் வாழ்வில்

ஏளனம் செய்யக் கூடாது. கடவுளின் படைப்பில் எந்த ஒருவரும், ஒரு பொருளும் ஏதோ ஒரு பயன் கருதியே படைக்கப் பட்டிருக்கிறது. அதது அதற்கென விதிக்கப்பட்ட பலனைத் தருகிறது. அவை யாது, என்ன, எதற்கு என்பதெல்லாம் நாம் பூரணமாக அறிந்தவறில்லை. இது உசத்தி இது தாழ்த்தி என்று எதையும் நாம் நிச்சயம் செய்ய முடியாது. 


ஒரு பெரிய பிரம்மாண்டமான நிறுவனத்தில் பணி செய்யும் அந்த நிறுவனத்தின் சீப் எக்சிக்யூடிவ் , தலைமை அதிகாரி அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு

முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த ஸ்தாபனத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியனும் கூட. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 


இது உசத்தி இது தாழ்த்தி என்ற பாகுபாடு கூடாது. இரு நிலைகளுமே அந்த நிறுவனம் நடைபெற முக்கிய பங்காற்றுகிறது .

அதே போல் பொதுவெளியில் அவரவர் வகிக்கும் ஸ்தானங்கள் அந்தந்த இடங்களுக்கு முக்கியமானவை. 


வகிக்கும் பதவிகளை வைத்து கீழுள்ளவரை ஏளனமாகவோ துச்சமாகவோ பேசுவதும் நடத்துவதும் மிகவும் தவறு. தொழில்களிலும் உயர்ந்தது தாழ்ந்தது என்று வித்தியாசம்

கிடையாது .  ஏளனமாகவோ கேலியாகவோ பேசினால் சில நேரம் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இதோ இந்த மகாபாரதக் கதையைப் பார்க்கலாம். 


பாண்டவர்,கிருஷ்ணர் மற்றும் மயன் துணையால் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை புதிதாக நிர்மாணித்து ஆண்டனர். பாண்டவர் ராஜசூயம் எனும் வேள்வி செய்தனர். அதற்காக புது நவீன அரண்மனை கட்டினர். ராஜசூய வேள்விக்கு வந்திருந்தவர்களில் துரியோதனனும் ஒருவன். 


துரியோதனன் நவீன அரண்மனையை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, தரை போன்ற நீர்நிலையில் விழுந்து விட்டான். அதைக் கண்ட திரெளபதி, குருடனின்  மகன் குருடனே என்று, துரியோதனனைப் பார்த்து எள்ளிநகையாடினாள். 


அதனால் தீராத அவமானமுற்ற துரியோதனன், திரெளபதியை பழி வாங்க திட்டமிட்டான். அத்தினாபுரம் திரும்பிச் சென்ற துரியோதனன், தானும் ஒரு சபா மண்டபத்தைக் கட்டினான். அச்சபாமண்டபத்தை பாண்டவர்கள் கண்டு களிக்கவும் சூதாடவும், இந்திரப்பிரஸ்தத்திற்கு, தனது தந்தை திருதராட்டிரன் மூலம் விதுரனை தூது அனுப்பினான் துரியோதனன்.


கௌரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் தருமன், சகுனியின் கபடத்தால் தனது நாடு, படை, பணியாட்கள், செல்வங்கள், சகோதரர்கள் மற்றும் திரெளபதியையும் இழந்தான். 


அடிமையான திரெளபதியை தன் தொடையில் அமர்த்த, துரியோதனன் தன் தம்பியான துச்சாதனனுக்கு ஆணையிட்டான். துச்சாதனன், திரெளபதியின் நீண்ட கூந்தலை கைகளால் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அத்தினாபுர அரசவைக்கு இழுத்து வந்தான்.


இப்படி திரௌபதியின் ஏளனப் பேச்சு பாரதப் போரில் முடிந்தது. எனவே

நம் வாழ்வில் எதையும் யாரையும் ஏளனம் பேசாதிருத்தல் நல்லது.